புறாவும் எறும்பும் | The Ant and the Dove
புறாவும் எறும்பும்.!
The Ant and the Dove.!
Bright kids stories,
புறாவும் எறும்பும்
ஒரு நாள் மிகவும் தாகமாக இருந்த எறும்பு ஒன்று, அருகில் இருந்த ஆற்றில் நீரருந்த சென்றது. தாகம் தீர நீரருந்திய எறும்பு, கரையில் ஏற முயன்ற போது, தவறிப் போய் ஆற்றில் விழுந்து விட்டது. நீரோட்டம் வேகமாக இருந்ததால், ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப் பட்டது அந்த எறும்பு.
நீரில் தத்தளித்த எறும்பு உதவிக்காக துடித்து அலறியது. அப்போது அங்கு ஆற்றின் கரையில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த புறா ஒன்று, அபயம் தேடும் எறும்பின் குரலைக் கேட்டது. உடனே விர்ரென்று எறும்பின் அருகில் பறந்து வந்தது.
"என்னைக் காப்பாற்றேன் ! என்னைக் காப்பாற்றேன்! " என்று புறாவைப் பார்த்து பயத்தில் அலறியது எறும்பு.
சற்று நேரம் யோசித்த புறா, மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக பறந்தது. மரத்தின் கிளையில் இருந்த இலைகள் ஒவ்வொன்றாக பறித்து, நீரில் எறும்பு இருந்த இடத்திற்கு அருகில் போட்டது. மெல்ல தட்டுத் தடுமாறி, ஒருவாறு ஒரு இலையை பற்றிக் கொண்ட எறும்பு, அதன் மீது ஏறிக் கொண்டது. இலை மெல்ல நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப அப்படியே மிதந்து, கரைக்கு அருகில் ஒதுங்கியது.
மெல்ல கரையில் ஏறிக் கொண்டு, தனக்கு உதவிய புறவினைக் கண்டு " எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி " என்றது. அதன் பின், புறாவும் எறும்பும் அவரவர் வழியில் சென்றனர்.
சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் காட்டில் வேட்டையாட வந்த வேடனொருவனின் கண்ணில் புறா பட்டது. புறாவை நோக்கி அம்பெய்ய குறி பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வேடன். வேடனை கவனியாது வேறு திசை நோக்கித் திரும்பியிருந்தது புறா. வேடனையும் புறாவையும் கண்ட எறும்பு, வேக வேகமாக வேடனை நோக்கி ஊர்ந்தது. சென்ற வேகத்தில், வேடனது காலில் கடித்து விட்டது.
வலியால் துடித்த வேடன், சட்டென்று அசைய, அவனது குறி தவறிப்போய் மரத்தில் குத்திட்டு நின்றது. மரத்தின் அதிர்வினால் சுதாரித்துக் கொண்ட புறா, வேகமாகப் பறந்து விட்டது. எறும்புக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டது.
நீதி: தன்னைப் போல் பிறரையும் நேசி.
Comments
Post a Comment