காகங்களின் எண்ணிக்கை என்ன?

காகங்களின் எண்ணிக்கை என்ன?

அக்பர் தமது பிரச்சனைகளுக்கு விடை காண பீர்பாலையே நம்பியிருப்பது அரச சபையில் இருந்த மற்ற அமைச்சர்களுக்கு வருத்தமாகவும் பொறாமையாகவும் இருந்தது. இது குறித்து அரசரிடம் எல்லோரும் ஒன்று கூடி கேட்டு விடுவது என தீர்மானித்தார்கள்.அரச சபை கூடியது, அரசே தாங்கள் எந்த பிரச்சனைக்கும் பீர்பாலையே எதிர் பார்க்கிறீர்கள். 

அமைச்சர்களாகிய எங்களை மட்டம் தட்டுவது போலவும், முட்டாள் ஆக்குவதாகவும் உள்ளது என்று அமைச்சர்கள் ஒன்றுகூடி மன்னரிடம் முறையிட்டார்கள்.

அமைச்சரின் குற்றச்சாட்டினைக் கேட்டு அரசர் சிரித்துக் கொண்டார். அமைச்சர்களே பீர்பாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் அவரது அறிவாற்றலும் திறமையும், சாதுர்யமான பேச்சும் தானே தவிர தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லை. அவரது மதிநுட்பத்தை போற்றுகிறேன் அதனால் உங்கள் அனைவரையும் இழிவாக கருதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் வந்துவிடுவார். உங்களுக்கு முன்னால் அவரை சோதிக்கிறேன். அவரது அறிவுத் திறமையை தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார் அக்பர்.

சிறிது நேரத்தில் பீர்பால் சபைக்கு வந்தார். அரசர் அமைச்சர்களுடன் மற்ற சில விஷயங்களை குறித்து விவாதித்தார். பிறகு திடீரென்று அரசர் அமைச்சர்களைப் பார்த்து நமது நாட்டில் மொத்தம் எத்தனை காகங்கள் உள்ளன என்பது யாருக்காவது தெரியுமா என்றார்?.

நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? மலைகள் உள்ளன என்று கேட்டால் கூறலாம். நாட்டில் உள்ள காக்கைகளின் எண்ணிக்கை யாருக்குத் தெரியும்? அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் விடை தெரியவில்லை. என்ன அமைச்சர்களே உங்களில் ஒருவருக்கும் விடை தெரியவில்லையா? என்றார் அரசர். பீர்பாலை பார்த்து நீங்களாவது பதில் கூறுங்கள் என்றார்.

அரசே நமது நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து முந்நூற்றி இருபத்து ஐந்து காகங்கள் இருக்கின்றன என்றார் பீர்பால். அமைச்சர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. காகங்களின் எண்ணிக்கையை பீர்பாலால் எப்படி கூற முடிந்தது? என்று வியந்து போனார்கள்.

தன்னை அறிவு ஜீவியாக நினைத்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒருவர் எழுந்தார். பீர்பால் தாங்கள் கூறிய எண்ணிக்கையை விட கூடுதலான அளவில் காகங்கள் இருந்தால் என்ன செய்வது? என்றார். அமைச்சர் பெருமானே… தாங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். நான் கூறிய எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் வெளியூரிலிருந்து நமது நாட்டிற்கு சில காகங்கள் விருந்தாளியாக வந்துள்ளன என தெரிந்து கொள்ளலாம்.
இன்னொரு அமைச்சர் பீர்பால் தாங்கள் கூறுவது போல் காகங்கள் அதிகமாக இருந்தால் விருந்தாளியாக வந்துள்ளன என்பது சரி, தாங்கள் கூறிய எண்ணிக்கையை விட காகங்கள் குறைவாக இருந்தால் என்ன செய்வது? என்று ஆணவத்துடன் கேட்டார். அப்படியும் இருக்கலாம். நமது நாட்டில் உள்ள காகங்கள் வெளியூரில் உள்ள உறவுக்கார காகங்களைப் பார்ப்பதற்கு சென்றிருக்கும் என்றார் பீர்பால் சிரித்துக் கொண்டே.

அமைச்சர் அனைவரும் ஆச்சர்யத்தில் பதில் பேச முடியாமல் மெளனமாக இருந்தார்கள். அரசர் அமைச்சர்களை நோக்கினார். வெட்கத்தில் முகம் கவிழ்ந்து போனார்கள் அமைச்சர்கள்...

Comments

Popular posts from this blog

புறாவும் எறும்பும் | The Ant and the Dove

உதவி செய்வதற்கு ஆயிரம் வழி உண்டு... அதில் நீங்கள் எவ்வழி? மனிதநேயம்!!

குளிரில் நின்றால் பரிசு